22.12.16

கிரிஜா வைத்தியநாதன் யார்???
வருமானவரித் துறையினர் சோதனையில் சிக்கிய தமிழக தலைமைச் செயலாளர் ராம்மோகன் ராவ் அந்தப் பதவியில் இருந்து நீக்கப்பட்டு புதியதாக கிரிஜா வைத்தியநாதன் அவர்கள் தலைமைச் செயலாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

யார் இந்த கிரிஜா வைத்தியநாதன்?

01.7.1959ல் தஞ்சாவூர் மாவட்டத்தில் பிறந்தவர் கிரிஜா வைத்தியநாதன், நலவாழ்வு பொருளாதாரம் தொடர்பான ஆய்வு படிப்பை மேற்கொண்டு ஐஐடியில் முனைவர் பட்டம் பெற்றுள்ளார். 1981ம் ஆண்டு தமிழ்நாடு ஐஏஎஸ் பிரிவைச் சேர்ந்தவர். கிரிஜா வைத்தியநாதனின் தந்தை வைத்தியநாதன் ரிசர்வ் வங்கியின் ஆளுநராக இருந்து ஓய்வு பெற்றவர்.

மதுரை மாவட்டத்தின் ஆட்சித் தலைவராக பணியாற்றியுள்ளார். சுகாதாரத் துறை, கல்வித் துறைகளில் உயர் அதிகாரியாக இருந்து பணியாற்றியுள்ளார். சுகாதாரத் துறையில் மட்டும் 15 ஆண்டுகள் பணியாற்றி குறிப்பிடத்தகுந்த பணிகளை செய்துள்ளார்.
சமூக நல்வாழ்வு துறையிலும் சிறப்பாக பணியாற்றியுள்ளார்,

இவருடைய பெயர் கடந்த முறையே தலைமைச் செயலாளர் பொறுப்பிற்கு பரிந்துரை செய்யப்பட்டது. அப்போது, கிடைக்காத பொறுப்பு தற்போது கிடைத்துள்ளது. தற்போது தலைமைச் செயலாளர் பொறுப்போடு நிர்வாக சீர்த்திருத்தத் துறையையும் கிரிஜா வைத்தியநாதன் கூடுதலாக கவனிப்பார் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

மேலும், இவர் தமிழக பாரதிய ஜனதா கட்சியில் முக்கிய பங்கு வகிக்கும் நடிகர் எஸ்.வி.சேகரின் உடன் பிறந்த சகோதரரின் மனைவி என்பது குறிப்பிடத்தக்கது.

21.12.16

சாமானியர்களுக்கான ஒரு சிறப்புச் செய்தி:இன்று 21.12.2016 புதன் காலை 5 மணி முதல்  தமிழக அரசின் தலைமைச் செயலாளர் திரு.ராம்மோகன் ராவ், வீடு மட்டும் அலுவலகத்தில் நடக்கும் வருமான வரித்துறையினரின் திடீர் சோதனை தமிழக அரசில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. 

தலைமைச் செயலாளர் என்றால் யார் ? அவர் பணி என்ன? அரசியல்வாதிகள், அரசுத்துறையினருக்கு மட்டுமே பரிச்சயப்பட்ட இந்த பதவியைப் பற்றி, சாமானிய மக்களுக்கும் விளக்கும் விதமான ஒரு சிறிய செய்திக்குறிப்பு இதோ:

தமிழக அரசின் தலைமைச் செயலர்/தலைமைச் செயலாளர் என்பவர் தமிழகத்தில் தமிழக அரசின் கீழ் பணிபுரியும் ஒரு மூத்த 'இந்திய ஆட்சிப் பணி' (IAS) அலுவலர் ஆவார். இவர் தமிழக அரசின் அனைத்துப் பணிகளுக்கும் பொறுப்பாளர்.

இவர் தமிழக அரசுத்துறைகளில் நேரடியாக அத்துறையின் அமைச்சரின் கீழ் செயல்படுவார். இவர்கள் இந்திய ஆட்சிப் பணித் தேர்வு பெற்றுப் பின் சார் ஆட்சியாளர்களாகவோ, கூடுதல் மாவட்ட ஆட்சியாளர்களாகவோ அல்லது அதற்கு இணையான பணிகளிலோ நன்கு அனுபவம் பெற்ற பின் மாவட்ட ஆட்சியாளர்களாக அல்லது அதற்கு இணையான பணிகளில் நன்கு அனுபவம் பெற்றவர்களாக இருப்பர்.

இவர்களுக்கு அடுத்தபடியாக கூடுதல் செயலாளர்கள் அல்லது இணைச் செயலாளர்கள் இருப்பர். இவர்களும் இந்திய ஆட்சியியல் மற்றும் நிருவாகவியலில் மிகுந்த திறமை மிக்கவர்களாக இருப்பர்.

இவர்களுக்கு அடுத்தபடியாக துணைச் செயலர்கள் இருப்பர். இவர்கள் இந்திய ஆட்சிப் பணித் தேர்வுகளில் தேர்வு பெற்ற பின் சில பயிற்சிகளுக்குப் பின்னர் பணியமர்த்தப்படுவர்.

தற்போதைய தலைமைச் செயலாளர் : திரு.ராம்மோகன் ராவ் IAS, ஆந்திர மாநிலம் பிரகாஷம் மாவட்டத்தைச் சேர்ந்த இவரை, கடந்த ஜுன்-8ம் தேதியன்று அன்றைய முதல்வர் ஜெயலலிதா அவர்களால் தமிழக அரசின் தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்டார்.