21.8.16

நம்பியார் விமர்சனம்


   கோல்டன் ஃப்ரைடே பிலிம்ஸ் எஸ். வந்தனா தயாரிப்பில், அறிமுக இயக்குனர் கணேசா இயக்கத்தில் , விஜய் ஆன்டனி இசையமைப்பில், ஸ்ரீகாந்த், சந்தானம், சுனைனா, ஜெய பிரகாஷ், டெல்லி கணேஷ், தேவதர்ஷினி என பெரிய நடிகர்கள் பட்டாளத்துடன் களம் இறங்கிருக்கிறது "நம்பியார்".

       ஐ.ஏ.எஸ். ஆகவேண்டும் என்ற கனவுடன் இருக்கிறார் ஹீரோ ஸ்ரீகாந்த். இவருடைய  மனசாட்சியாக வரும் சந்தானம், ஹீரோயினியாக  சுனைனா இவர்கள் மூவருக்குமிடையில் நிகழ்வுகளின் தொகுப்புதான் நம்பியார்.

      ஸ்ரீகாந்த்க்கு பல எதிர்மறையான எண்ணங்கள் தோன்றுகிறது. அந்த எதிர்மறையான எண்ணங்களுக்கு உருவம் கொண்டவர்தான்  சந்தானம். சந்தானத்தின் வழி நடக்கும் ஸ்ரீகாந்த் சுனைனாவை காதலிக்கிறார். சுனைனா டூயட் பாடுவதற்காக மட்டுமே திரையில் தோன்றுகிறார்.

             ஸ்ரீகாந்த் எந்தவொரு செயல் செய்தாலும் அதனை குறை சொல்லும் மனசாட்சியாக சந்தானம் இருக்கிறார். சந்தானத்தின் வழி நடக்கும் ஸ்ரீகாந்த் தான் படிப்பதை மறந்து சுனைனாவை காதலிக்கிறார். பின் சந்தானத்தின் வழி காட்டுதலில்  சுனைனாவோடு சண்டையிடுகிறார். காதலிலும் தோற்று, படிப்பிலும் தோற்று வாழ்க்கையிலும் தோற்கின்றார். இத்தனை தோல்விகளுக்கும் காரணமான ஸ்ரீகாந்தின் எதிர் மறை எண்ணங்களின் பிரதிபலிப்பாக வரும் சந்தானத்தின் பேச்சை மீறி, பிரச்னைகளை எப்படி தீர்க்கிறார், பின்னர் என்ன நடக்கிறது என்பதே மீதி கதை.

          இசை விஜய் ஆன்டனி என்று சொல்லித்தான் நம்பவைக்கணும். பாடல்கள் எல்லாம் சுமார் ரகம் தான். ஜெய பிரகாஷ், டெல்லி கணேஷ், தேவதர்ஷினி மற்றும் ஒளிப்பதிவாளர் எம்.எஸ்.பிரபு அவர்கள் வேலையை அவரவர் செய்திருக்கிறார்கள். ஹீரோவுக்குள் இருக்கிற மனசாட்சி நகைச்சுவையாகவும், சுவாரசியம்  அளிக்கும் வகையில் இருந்தலும்  திரைக்கதையில் அது எதுவுமே இல்லை என்றே கூறலாம்.

மொத்தத்தில் "நம்பியார்" - நம்பினால் எமாற்றம் தான்!!