26.9.16

ஆண்டவன் கட்டளை விமர்சனம்       ஜி.என்.அன்பு செழியன் தயாரிப்பில், இயக்குனர் மணிகண்டன் இயக்கி, மணிகண்டன், அருள்செழியன், அணுசரண் ஆகியோரும் இணைந்து திரைக்கதை எழுதிருக்கிறார்கள். விஜய் சேதுபதி, ரித்திகா சிங், நாசர், பூஜா தேவாரியா, வெங்கடேஷ், சிங்கம் புலி, யோகி பாபு, மற்றும் சிவஞானம் அரவிந்தன் என்ற ஒரு பெரிய நடிகர் பட்டாளத்துடன் வெளியாகியிருக்கும் திரைப்படம் "ஆண்டவன் கட்டளை".

         சமூகத்தில் வாழும் ஒரு சராசரி குடும்பத்தில் பிறந்து வளர்ந்த ஒரு இளைஞனுக்கு இருக்கும் பொறுப்புகளும் ஆசைகளும் நிறைந்த மனநிலையையும், அவர் வாழ்க்கையில் படும் துன்பம் மற்றும் இன்பங்களை மிகவும் எதார்த்தமாகவும்  நகைச்சுவையாக பரிமாரியிருக்கிறார் இந்த படத்தின் இயக்குனர். போலி ஆவணங்களால் ஏற்படும் பிரச்சினைகள் தான் இத்திரைப்படத்தின் கதை.

          நாம் அறியாமல் செய்கின்ற சிறிய தவறு, பின்னர் அதுவே வாழ்வில்  பிரச்சனையாக வந்து கஷ்டத்தை தரும்! இதுதான் படத்தின் ஒன் லைன்!

        மதுரை அருகில் உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் விஜய் சேதுபதி. தான் வாங்கிய கடனை அடைப்பதர்க்காக வெளிநாட்டுக்கு சென்று பணம் சேர்க்கும் வழக்கமான ஆசையில் சென்னைக்கு வருகிறார். அங்கு ஒரு ஏஜென்டை அனுகி, அவர்  மூலம் லண்டன் விசாவிற்க்கு முயற்சி செய்கிறார். ஆனால் தனக்கு திருமணம் ஆனது போன்று விசா அப்ளிகேஷனில் காட்டினால்தான் விசா கிடைக்கும் என்று ஏஜென்ட் சொல்ல, அதற்கு கார்மேக குழலி என்று தனது மனதில் தோன்றிய பெயரை குடுத்துவிடுகிறார்.

    இவருடன் நகைச்சுவை நடிகர் யோகி பாபுவும் வருகிறார். அதிர்ஷ்டவசமாக யோகி பாபுவுக்கு  விசா கிடைத்து விட விஜய் சேதுபதிக்கு கிடைக்காமல் போய்விடுகிறது. அதனால் சென்னையிலேயே தங்கி விசா கிடைக்கும் வரை எதாவது ஒரு வேலைபார்ப்போம் என்று முடிவு செய்கிறார். அப்போதுதான் நாசர் நடத்தும் நாடகக்கூடத்தில் கணக்காளராக வேலை கிடைக்கிறது. விஜய் சேதுபதி ஆர்வத்துடனும் ஈடுபாடுடனும் வேலை செய்வதைப்பார்த்து நாசருக்கு மிகவும் பிடித்து விடுகிறது.

        நன்றாக போய்க்கொண்டிருக்கும் வாழ்க்கையில் திடிரென ஒரு திருப்பம் வருகிறது.  நாசரின் நாடகக்கூடம்  முலம் லண்டனுக்கு செல்ல வாய்ப்பு ஒருபுறம் இருக்க, விஜய் சேதுபதி தனது  பாஸ்ப்போர்ட்டில் இருக்கின்ற  கார்மேக குழலி என்ற பெயரை மாற்றவேண்டும் என்று முடிவுசெய்கிறார்.

      இதற்கு என்ன செய்யவேண்டும் என்று வக்கீலிடம் போகும் விஜய் சேதுபதி, 'அதற்கு முதலில் டைவர்ஸ் வாங்கணும், அதே பெயரில் இருக்கற எவரோ ஒருவரின் ஐடி வேணும்' என்கிறார்கள். டிவி சேனல் ஒன்றில்  செய்தியாளராக பணிபுரியும் ரித்திகா சிங் பெயரும் கார்மேக குழலி என்று அறிந்து அவரிடம் உதவி கேட்கிறார்கள். இதற்கு அவர் ஒப்புக்கொண்டாரா, பாஸ்போர்ட் என்ன ஆகிறது, லண்டன் போன யோகி பாபுக்கு என்ன ஆகிறது?? நாசர் தனது குழுவினருடன் லண்டன் செல்கிறாரா? என்பதே மீதிக்கதை.

       அருள்செழியனின் கதை  கண்முன் நடக்கிற தவறான வழிகளை நாமும் தேர்ந்தெடுத்தால்  பிரச்சனைகளை மட்டும் சந்திக்க வேண்டும் என்று தெளிவாக கூறியுள்ளார். திரைக்கதை மெல்லமாக சென்றாலும், ஒவ்வொரு முடிச்சாக அவிழ்த்து, தெளிவான முறையில் சொல்லியிருக்கிறார்கள்.

           விஜய் சேதுபதி வழக்கம் போல தனது பாணியில் நடிப்பை அழகாய் வெளிப்படுத்தியிருக்கிறார். ரிப்போர்ட்டராக ரித்திகா சிங் துணிச்சலும் தைரியமும் நிறைத்த பெண்ணாக பிரதிபலிக்கிறார். யோகி பாபு வரும் காட்சிகள் அனைத்தும் நகைச்சுவை பாங்குடன் இருக்கிறது. இலங்கைத் தமிழராக வரும் சிவஞானம் அரவிந்தின்  நடிப்பும் மனதில் நிற்கிறது. நாசர், பூஜா தேவாரியா, வெங்கடேஷ், சிங்கம் புலி ஆகியோருக்கு படத்தில் சொல்லுமளவிற்கு காட்சிகள் இல்லை.

     கே இசையில் பாடல்கள் சுமார் ரகம் தான். பின்னணி இசை திரைப்படத்தின் பலம். திரைக்கதை, வசனங்கள், கதைக்களம், கதாபாத்திரத்துக்கு ஏற்ற நடிகர்கள் என்று மொத்தத்தில் "ஆண்டவன் கட்டளை" ஒரு நிறைவான திரைப்படம்.