20.11.15

ஒரு நாள் இரவில் விமர்சனம்

   ஷட்டர் என்று 2012 வெளிவந்த மலையாள சூப்பர் ஹிட் திரைப்படத்தின் ரீமேக் இந்த ஒரு நாள் இரவில் திரைப்படம். ஏ.எல்.அழகப்பன் மற்றும் சாம் பால் தயாரிப்பில் இயக்குனர் ஏ.எல்.விஜய் வழங்கும் இத்திரைப்படத்தின்  இயக்குனராக அறிமுகம் ஆகியிருக்கும் அந்தோனி.  ஒரு மத்தியதரவர்க்கத்து உறவுகளையும் அதன் உணர்வுகளையும் மையமாக வைத்து பின்னப்பட்ட திரைக்கதை. இதுவே இப்படத்தின் மிகப்பெரும் பலம்.  


சிங்கப்பூர் சென்று கைநிறையப் பணம் சம்பாதித்துவிட்டு சென்னை திரும்பும் ஒரு நடுத்தர குடும்பதலைவன் சத்யராஜ்.  ஒரு முறை கல்லூரி சென்று திரும்பும் தன் மகள் தீக்ஷிதா ஆண் நண்பருடன் இருசக்கர வாகனத்தில் வருவதைக் கண்ட சத்யராஜ் மகளின் படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு திருமண ஏற்பாட்டில் இறங்குகிறார்.  இதற்கு சத்யராஜின் மனைவியான கல்யாணிநடராஜன் கடும் எதிர்ப்பு தெரிவிக்கிறார். இதனால் மனமுடையும் சத்யராஜ் மது, மாது என பாதை மாறுகிறார். ஆட்டோ ஓட்டுனராக வரும் வருண் இவரை பாலியல் தொழிலாளியான அனுமோலிடம் அழைத்துச் செல்கிறார். பாலியல் தொழிலாளியிடம் தங்க பயப்படும் சத்யராஜ் தன் வீட்டின்முன் உள்ள கடைகளில் காலியான ஒரு கடையில் தங்க முடிவெடுக்கிறார். பக்கத்து கடைகள் மூடும் வரை காத்திருந்து உள்ளே செல்லும் சத்யராஜும், அனுமோலும் எதிர்பாராத சிக்கலால் கடையிலிருந்து வெளிவர முடியாமல் மாட்டிக்கொள்கிறார்கள்.  அதே சமயம் இப்படத்தில் இயக்குனராக நடித்திருக்கும் யூகிசேது வருணின் ஆட்டோவில் தன் திரைக்கதைப் பையை தவறவிடுகிறார். அந்தப் பை சத்யராஜ், அனுமோல் இருக்கும் கடையினுள் மாட்டிக் கொள்கிறது.  சத்யராஜும், அனுமோலும் எப்படி வெளியே வந்தார்கள்? யூகிசேது'விற்கு அவரது பை கிடைத்ததா? இல்லையா? என்பதை பதட்டத்துடன் எதிர்பார்க்க வைத்திருக்கிறார்கள்.  மகளை வேறொரு ஆணுடன் பைக்கில் வருவதை கண்டதும் வரும் கோபம், மனைவியுடன் சண்டை, பூட்டிய கடைக்குள் மாட்டிக்கொள்ளும் பொழுது வரும் பயம், தன் நண்பர்களால் நாம் ஏமாற்றப்பட்டுவிட்டோம் என தெரிய வரும்பொழுது வரும் ஆத்திரம் என சத்யராஜின் நடிப்பு பிரமாதம். ஒரு நடுத்தர குடும்ப தலைவனின் உணர்வுகளை நம் கண் முன் அப்படியே பிரதிபலித்திருக்கிறார்.  

பாலியல் தொழிலாளியாக வரும் அனுமோல் தன் கதாபாத்திரத்தை முழுமையாக நிறைவு செய்திருக்கிறார்.  திரைக்கதை ஒன்றை எழுதி வைத்துக் கொண்டு பெரிய நடிகர்களைத் தேடி அலையும் யூகிசேது தன் தேடலிலேயே ஒட்டுமொத்த உணர்வுகளையும் கொட்டிவிட்டார். இப்படத்தில் இவர் எழுதிய வசனங்களும் சூப்பர்..  அறிமுக நடிகராக வரும் வருண், மற்றும் கதையில் வரும் அனைத்து கதாபாத்திரங்களும் கதைக்கு பொருத்தமாகவே தங்கள் நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.  படத்தொகுப்பாளரான ஆண்டனிக்கு இயக்குனராக இது முதல் படம் என்றாலும் ஒரு நடுத்தர குடும்பத்து உணர்வுகளை காட்சிக்கு காட்சி பதட்டம் குறையாமல் கொண்டு சென்றதில் பாராட்டுக்கள். 

மொத்தத்தில் "ஒரு நாள் இரவில்" அனைவரும் ரசிக்கலாம்.
- லெனின்